38. அருள்மிகு பிராணநாதேஸ்வரர் கோயில்
இறைவன் பிராணநாதேஸ்வரர்
இறைவி மங்கள நாயகி
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
தல விருட்சம் கோங்கிலவம் (வெள்ளெருக்கு)
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருமங்கலக்குடி, தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள ஆடுதுறை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சூரியனார் கோயில் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். சூரியனார் கோயிலிலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. நடந்தே சென்று விடலாம்.
தலச்சிறப்பு

Tirumangalakudi Gopuramசோழ தேசத்தை ஆண்டு வந்த அரசனின் தண்டலர், அரசனுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை அனுமதி பெறாமல் எடுத்து இறைவனுக்கு கோயில் எழுப்பினார். இதை அறிந்த அரசன் அமைச்சரை அவரை அழைத்துவர உத்தரவிட்டான். ஆணை அறிந்த அவர் உயிர் துறந்தார். இதை அறிந்த அலைவாணரின் மனைவி திருமங்கலக்குடிக்குச் சென்று தனது கணவரை உயிர்ப்பித்து தருமாறு மங்களாம்பிகையை வேண்டி அழுதாள். அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரும்போது இறைவனின் கருணையினால் உயிர் பெற்றார். இறந்தவருக்கு பிராணனை கொடுத்ததால் இத்தலத்து மூலவர் 'பிராணநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். அந்தப் பெண்ணுக்கு மாங்கல்ய பாக்யத்தை மீண்டும் அருளியதால் அம்பிகை 'மங்கள நாயகி' என்று அழைக்கப்படுகின்றார்.

Tirumangalakudi Moolavarமூலவர் 'பிராணநாதேஸ்வரர்', 'புராணேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'மங்கள நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். பெண்கள் இங்கு வந்து தங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்காக பிரார்த்தனை செய்துக் கொள்கின்றனர்.

இக்கோயிலில் விநாயகர் மங்கள விநாயகர், அம்பிகை மங்களாம்பிகை, விமானம் மங்கள விமானம், தீர்த்தம் மங்கள தீர்த்தம் என்று ஐந்தும் 'மங்களம்' என்னும் பெயருடன் வருவதால் இந்தத் தலம் 'பஞ்ச மங்கள க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

காலவ முனிவருக்கு ஏற்பட்ட தொழுநோயை நவக்கிரகங்கள் நீக்க, அதனால் கோபமடைந்த பிரம்மதேவர், நவக்கிரங்கள் தங்கள் நிலையை மீறியதால் அந்த தொழுநோய் அவர்களை பிடிக்கட்டும் என்று சாபமிட்டார். அவர்கள் சாபவிமோசனம் வேண்ட, பிரம்மதேவனும் திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு வனத்தில் தங்கி, இங்கு வந்து ஈசனை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்றார். நவக்கிரகங்கள் அவ்வாறே செய்து சாமவிமோசனம் பெற்றனர். அந்த வெள்ளெருக்கு வனமே சூரியனார் கோயில். அதனால் அருகில் உள்ள திருமங்கலக்குடியில் நவக்கிரகங்கள் இல்லை.

இங்குள்ள அகத்தீஸ்வரருக்கு அமாவாசை நாளில் அபிஷேகம் செய்தால் பித்ரு தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் இரண்டு துர்க்கை சன்னதிகளும், இரண்டு நடராஜர் உற்சவ மூர்த்திகளும் உள்ளனர்.

திருமால், பிரம்மா, காளி, சூரியன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com